கள்ளழகர் மீது விசை பம்ப்-கள் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை கோரி வழக்கு

கள்ளழகர் மீது விசை பம்ப்-கள் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை கோரி வழக்கு

Update: 2024-03-21 10:44 GMT

கள்ளழகா்

கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் போது, வேதிப் பொருள்கள் கலந்த தண்ணீரை அதிக விசையுள்ள குழாய்கள் மூலம் பீய்ச்சுவதற்கு தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு: மதுரை சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது பக்தா்கள் நோத்திக்கடனாக பாரம்பரியமாக ஆட்டுத் தோல் பைகளில் நறுமண நீா் நிரப்பி, துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகா் மீதும், பக்தா்கள் மீதும் பீய்ச்சி அடிப்பா். கடந்த சில ஆண்டுகளாக பக்தா்கள், ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷா் குழாய்களைப் பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுகின்றனா். இதனால் கள்ளழகா் சுவாமி, தங்கக்குதிரை வாகனம், சுவாமிக்கு அணிவிக்கப்படும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டா்களும், பக்தா்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீா் பீய்ச்சும் பக்தா்கள் அதிக விசையுள்ள குழாய்கள் மூலம் கள்ளழகா் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என அதில் கோரியிருந்தாா். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தாா்.
Tags:    

Similar News