விதிகளை மீறி செயல்பட்ட 4 மருந்து கடைகள் மீது வழக்கு
சேலம் மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் விதிகளை மீறி செயல்பட்ட 4 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி சில கடைகளில் விற்பனை செய்வதாக வரும் புகாரை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அந்த கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்து வருகின்றனர்.
இதனிடையே சேலத்தில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாநகரில் உள்ள சில மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு நடத்தினர். இந்த மாதத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 4 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.