தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வழக்கு- நிபுணர் குழு ஆய்வு
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வழக்கு- நிபுணர் குழு ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆறு மாசுபடாமல் தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.விக்கிரமசிங்கபுரம் அனைத்து சமுதாய பேரவை தலைவர் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பாபநாசம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பக்தர்கள் ஆற்றில் குளித்துவிட்டு கோயிலில் வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. சிலரின் தவறான வழிகாட்டுதலால் திதி, தர்ப்பணம், யாகம், பரிகாரங்கள் செய்து அப்பொருட்கள், உடுத்திய ஆடைகளை மக்கள் தாமிரபரணியில் வீசுகின்றனர். ஆறு மாசுபடுகிறது. ஆடைகள் பாறைகளின் இடுக்குகளில் சிக்கிக் கொள்கின்றன. மக்கள் குளிக்கச் செல்லும்போது கால்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
அத்துணிகளை நகராட்சி ஊழியர்கள், போலீசார், தன்னார்வலர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீராதாரமான தாமிரபரணியை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். திதி, தர்ப்பணம் மற்றும் மதம் சார்ந்த சடங்குகளுக்கு பாபநாசத்தில் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை தாமிரபரணியில் மதம் சார்ந்த சடங்குகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும். அதில் பொதுப்பணித்துறை தாமிரபரணி பாசன செயற்பொறியாளர், திருநெல்வேலி அறநிலையத்துறை இணைக் கமிஷனர், பாபநாசம் கோயில் செயல் அலுவலர் இடம் பெற வேண்டும். இக்குழு ஆய்வு செய்து மாசுபடாமல் தாமிபரணியை பாதுகாக்க பரிந்துரைகளை இந்நீதிமன்றத்தில் ஜூலை 15 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.