காணொளி காட்சி மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
உலகம் டிஜிட்டல்மயமாகி விட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.
காணொளி காட்சி மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை -நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் திறப்பு விழா நேற்றுநடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் திறந்து வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த பூங்காவை உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி சக்திவேல் பேசுகையில்,"ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயற்கை எழில்மிகு இடத்தில் அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்கு இணையாக இந்த நீதிமன்றம் உள்ளது. இன்றையாக காலகட்டத்தில் அனைத்து துறைகளும் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றொருபுறம் குற்ற செயல்களும் அதிகரித்து உள்ளது. நீலகிரியில் குற்ற மற்றும் உரிமை வழக்குகள் குறைவாக உள்ளன. இங்குள்ள மக்கள் குற்ற மனமில்லாதவர்களாக உள்ளனர். நீதியை நிலைநாட்ட நிர்வாகத்துறை, காவல்துறை மற்றும் நீதித்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,"என்றார்.
உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் கூறியதாவது: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தனி மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதில் வழக்கறிஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. நீதிமன்றங்களால் மட்டும் இதை தடுக்க முடியாது. ஊட்டியில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் திறந்ததையடுத்து மக்கள் பிற மாவட்ட வழக்கறிஞர்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாவட்டத்திலுள்ள வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்றத்திற்குட்பட்ட வழக்குகளை எடுத்து மக்களுக்கு விரைந்து நிதி கிடைக்க வழிவகை செய்வோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.
தற்போது இந்த நீதிமன்றத்திற்கு உட்பட்டு 29 வழக்குகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ளது. பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் வழக்குகள் இங்கு குறைவு. இருந்த போதிலும் இந்த நீதிமன்ற வளாகத்தில் நவீன கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகம் டிஜிட்டல்மயமாகி விட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் இங்கிருந்தபடி காணொளி காட்சி மூலம் ஆஜராகலாம். புதிய சட்டங்கள் வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. எனவே, புதிய சட்டங்கள் குறித்து வழக்கறிஞர்கள் அறிந்திருக்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு சாலை மேம்படுத்தும் திட்டத்திற்கான மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நிதி பெறப்படும். வழக்கறிஞர்கள் கூட்ட அறை ஏற்படுத்துவது தொடர்பாக பொதுப்பணி துறை நிர்ணயித்துள்ள வாடகை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதை 50 சதவீதம் குறைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி மற்றும் கூடலூர் நீதிமன்ற கட்டிடத்தற்கான மதிப்பீடு தயாரிக்கப்படு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டள்ளது. குன்னூர் நீதிமன்ற கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்காக 16 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு மாற்ற வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இது தீர்க்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். குறிப்பாக விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சட்டப்பணிகள் ஆணையக்குழு மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். விழாவில், மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், நீலகிரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகாதேவன், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.