தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு

வெள்ளகோவில் அருகே பொது இடத்தில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Update: 2024-03-20 07:17 GMT

தேர்தல் புறக்கணிப்பு பேனர்

வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம் வரும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்திரனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட கடந்த நான்கு வருடங்களாக அனுமதி கிடைக்கவில்லை. அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுத் தலம் கட்ட அனுமதி கேட்டு, அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . பேனர் வைத்ததாக சேனாபதி பாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (வயது 27), சிலம்பரசன் (வயது 35), சைமன் (வயது 35), பிரவீன் (வயது 31), மேத்யூ (வயது 29) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News