ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குபதிவு
சாத்தான்குளம் அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போலீஸார் 6மாதத்திற்கு பிறகு வழக்குபதிந்துள்ளனர்.;
வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அற்புதகனகராஜ் (58). இவரும் , இவரது மனைவியும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவரது வீட்டுக்கு முன்புள்ள அவரது இடத்தை அடைத்து வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அன்னமாதவடியான் மகன் பிரான்சிஸ் வியாகப்பன் என்பவர் கடந்த 2021இல் இவரது இடத்தை அடைத்து வைத்திருந்ததை உடைத்து விட்டதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் இவரது வீட்டு முன்பிருந்த இடத்தில் பிரான்சிஸ் வியாகப்பன் கடந்த 2.12.23 அன்று பொக்கலைன் இயந்திரம் மூலம் மணல், ஜல்லிகளை கொண்டு நிரப்பியுள்ளார். இதனை அற்புத கனகராஜ், அவரது மனைவி தடுத்தபோது, அவர்களை அவதூறாக பேசி சென்று விட்டாராம். இதனையடுத்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையம், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு புகார் செய்துள்ளார்.
இதனையறிந்த பிரான்சீஸ் வியாகப்பன், அற்புதகனகராஜ் வீட்டிற்கு வந்து புகாரை வாபஸ் வாங்ககோரி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சாத்தான்குளம் போலீஸாருக்கு இவரது புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
அதன்பேரில் பிரான்சிஸ் வியாகப்பன் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் தலைமை காவலர் முருகேசன் வழக்குபதிந்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.