தானியங்கி கேமரா மூலம் வழக்கு பதிவு : இன்று முதல் துவக்கம்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்க்கு தானியங்கி கேமரா மூலம் வழக்கு பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2024-07-01 04:13 GMT

தானியங்கி கேமரா

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் தாலுகா, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, பாலுச்செட்டிசத்திரம், மாகரல், வாலாஜாபாத், பெருநகர், சாலவாக்கம், உத்திரமேரூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய, 12 காவல் நிலையங்கள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் விபத்துகளை குறைக்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து குற்றங்களை தடுத்து, விபத்துகளை குறைக்க, தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று  முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, காஞ்சிபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமரா, சோலாரில் இயங்குகிறது. அந்தந்த காவல் நிலைய கட்டுப்பாடு அறை மற்றும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக சென்று விடும்.

இது, தவிர தனியார் வணிக வளாகங்கள், ஊராட்சி கூட்டு சாலைகள், தனியார் தொழிற்சாலை நிறுவனங்களின் முகப்பு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கின்றன. இதுதவிர, போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் நிலைய எல்லை கட்டுப்பாடு போலீசார் கண்காணிக்கும் போது, அதிவேகம், ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டுவது, காப்பீடு ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பிடிபடும் போது, காவல் துறையினரால் நிர்ணயம் செய்த அபராதம் விதிக்கப்படுகின்றன. சோதனை இல்லாத இடங்களில், சில நேரங்களில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகள் நேரிடுகிறன.

இதை தவிர்க்கும் விதமாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களில், வாகனங்கள் செல்லும் அதிவேகம் மற்றும் போட்டோ எடுக்கும் வசதியும் ஏற்படுத்தி உள்ளன. முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாகரல், உத்திரமேரூர் ஆகிய இரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், போக்குவரத்து விதிகளை மீறும் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து, தானியங்கி முறையில், வழக்குப் பதிவு செய்யும் அதிநவீன நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு, அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. விதிகளை மீறும் வாகனங்களின் எண்களை கண்டறியும் கேமராக்கள், வண்டி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் என, போலீசார் தெரிவித்தனர்.முதல்முறை அபராதம் விதிக்கும் போது, சாதாரண கட்டணமும், இரண்டாவது முறையில் கூடுதல் கட்டணம் என, அபராதக் கட்டணம் கூடிக்கொண்டே போகும். இனிமேல், அதிவேகமாக வாகனத்தை இயக்கக்கூடாது என்பதே இதன் நோக்கமாக இருக்கும்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இன்று  முதல், கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு வருகிறது.

அந்த கண்காணிப்பு கேமராவை கடக்கும் போது, தானியங்கி முறையில் அபராத தொகை செலுத்த வேண்டும் என, வாகன ஓட்டிக்கு குறுஞ்செய்தியாக சென்று விடும். இதில், ஆம்புலன்ஸ், காவல் துறை வாகனம் மற்றும் பாதுகாப்பு துறை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ தேவைக்காக அதிவேகமாக சென்று, ஒரு வாகன ஓட்டிற்கு குறுஞ்செய்தி வந்தால், உரிய ஆவணங்களை ஏழு நாட்களுக்குள் காவல் நிலையத்தில் சமர்ப்பித்தால், விதிமீறல் வழக்கை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News