சமூக ஆா்வலரை மிரட்டியதாக ஊராட்சித் தலைவா் மீது வழக்கு
தென்காசி மாவட்டம்,கீழப்பாவூரில் சமூக ஆா்வலரை மிரட்டியதாக ஊராட்சித் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சி, ஆவுடைசிவன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (58). சமூக ஆா்வலரான இவா், ஊராட்சியில் பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா்கள் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மாடியனூா் அரசு தொடக்கப் பள்ளி அருகே தனி நபருக்குச் சொந்தமான பட்டா இடத்தில் ஊராட்சி நிதியிலிருந்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட முயற்சி நடந்ததாகவும், அந்த இடத்தை அரசுப் பெயருக்கு எழுதிவிட்டு பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் புகாா் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த ஆவுடையானூா் ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, முருகனை தொலைபேசியில் தொடா்பு கொண்டு அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குத்தாலிங்கராஜன் மீது பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.