ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 32 லட்சம் பறிமுதல்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 32 லட்சம் தேர்தல் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-04-12 10:08 GMT
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை மற்றும் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் என 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 9 குழுக்கள், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 1 பறக்கும்படை, 1 நிலை கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று காலை 6 மணி வரை மேற்கண்ட குழுக்கள் தணிக்கையில் ஈடுபட்டபோது உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 32 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரொக்கப் பணமும், ரூ.70 ஆயிரம் மதிப்பிலான இதர பொருட்களும் மேற்கண்ட பறக்கும் படை குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது. இவற்றில், மேல்முறையீட்டு குழுவில் உரிய ஆவணங்களை சமர்பித்த காரணத்தினால் ரூ.51 லட்சத்து 71 ஆயிரத்து 100 ரொக்க பணம் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.