தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு
உலக தண்ணீர் மற்றும் வானிலை தினங்களை முன்னிட்டு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
உலக தண்ணீர் மற்றும் வானிலை தினங்களை முன்னிட்டு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பை மணிமுத்தாறு ஏட்ரி - அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம், பாளையங்கோட்டை சகத்துல்லா அப்பா கல்லூரி இணைந்து நடத்தி வருகிறார்கள்.
முதல் நாள் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கணக்கெடுப்பு தொடங்கியது. இரண்டாம் நாள் (23 மார்ச்) அன்று காலை 7 மணி தொடங்கி 9 மணி வரை 6 குழுக்களாக பிரிந்து பாபநாசம், திருப்புடைமருதூர், கோபாலசமுத்திரம், சீவலப்பேரி, கருங்குளம் மற்றும் திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பை நடத்தினார்கள். சீவலப்பேரியில் மீன்கள் கணக்கெடுப்பை நடத்திய பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யமந்திர் மாணவ மாணவிகள் 25 பேர் மருதூர் அணைக்கு வந்தனர். அவர்கள் மருதூர் அணைக்கட்டில் கீழக்கால்வாயில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் அணைக்கட்டு பகுதிக்குள் இறங்கி 4000 அடி நடந்தே மேலக்கால்வாய் பிரியும் பகுதிக்கு வந்தனர்.
வரும் வழியில் உள்ள ஆங்கிலேயர் காலத்து கல்வெட்டு, 13 ஆம் நூற்றாண்டு குலசேகரபாண்டிய மன்னரின் கல்வெட்டு மருதவல்லி, சோழவல்லி கோயிலின் முன்பு கிடந்த கல் சின்னங்களை பார்வையிட்டனர். அதன் பின் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அவர் தாமிரபரணி தோன்றும் இடம், அங்கு செல்லும் பயணம், பொதிகை மலை காடுகள், நதியில் உள்ள அணைக்கட்டுகள், இயற்கை ஊற்றுகள் மருதூர் அணைக்கட்டு கல்வெட்டுகள் மற்றும் பேசப்படும் கதைகள். அணையின் வரலாறு உள்பட பல்வேறு தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மணிமுத்தாறு ஏட்ரி - அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் மரிய ஆண்டனி, தணிகைவேல், தமிழழகன், அனிஷ், சஹானா, புஷ்பலதா வித்யமந்திர் ஆசிரியர்கள் வெங்கட் ராகவன், நிஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.