மத்திய அரசு இஸ்லாமியர்களை விரட்ட முயற்சிக்கிறது - திருச்சி சிவா

குடியுரிமைச் சட்டம் என்ற சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச இஸ்லாமியர்களை விரட்டும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது என திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்தார்.

Update: 2024-03-05 14:24 GMT

கூட்டத்தில் பேசும் திருச்சி சிவா 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர். என்.ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்,

சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில், திமுகவின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா பேசியதாவது.... மக்களுக்காக பாடுபடும் கட்சியாக திமுக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தபோது,

எதிர்க்கட்சியாக இருப்பினும் கொண்டு வந்த நோக்கம் சரியானது என்பதால் தற்போதைய முதல்வர், அப்போது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அதை ஆதரித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக தரப்பில் வாக்கெடுப்பு முன்வைக்கப்பட்ட போது, சபையில் இருந்து சத்தமின்றி வெளியேறியவர்கள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். நீட் தேர்வு எழுதி 5 ஆண்டுகள் படித்து முடித்தாலும், நெக்ஸ்ட் என்ற மற்றொரு தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வரும் முயற்சியில் உள்ளது.

ஏற்கனவே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மீண்டும் ஒரு தேர்வை எதிர்கொள்வது என்பது அவர்களை விரக்தியில் ஆழ்த்தும். இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை வேதனைப்படுத்தி வருகிறது பாஜக அரசு. குடியுரிமைச் சட்டம் என்ற சட்டத்தின் மூலம் பாகிஸ்தான்,

ஆப்கானிஸ்தான், வங்காளதேச இஸ்லாமியர்களை விரட்டும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தாலும் தவறு என்கிறபட்சத்தில் தைரியமாக தட்டி கேட்பது திமுக மட்டுமே. இந்திரா காந்தியுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது, அவரால் பாராட்டப்பட்ட கட்சியாக திமுக விளங்கியது. வரும் காலங்களில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றார்.

இக்கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், பூபதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News