சிறுத்தை நடமாட்டம் - மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்ற வனத்துறை
பந்தலூர் அருகே சிறுத்தை நடமாட்ட அச்சம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளை வனத்துறை வாகனம் மூலம் வனத்துறையினர். பாதுகாப்பாக பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
Update: 2024-01-10 08:28 GMT
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஞாயிறு அன்று மக்களை தாக்கி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மேங்கோ ரேன்ஜ் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்துள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பணிகளுக்கு செல்லவும் அதேபோல் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவும் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த நிலையில் வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வரும் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு தடை படாமல் சென்று வர வனத்துறையினர் முடிவெடுத்தனர். அதன்படி மேங்கோ ரேன்ஞ் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை வனத்துறை வாகனம் மூலம் வனத்துறையினர் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு அழைத்து செல்கின்றனர்.