28 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா
பாண்டமங்கலம் அருகே குச்சிப்பாளையம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்கு பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது.
பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத்தில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா 28 ஆண்டுகளுக்கு பிறகு குடிபாட்டு மக்களின் முயற்சியில் நடைபெற்றது. விழாவை யொட்டி செல்லாண்டியம்மன் குச்சிப்பாளையத்தில் இருந்து பாண்டமங்கலத்திற்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
பின்னர் பாண்டமங்கலத்தில் உள்ள செல்லாண்டியம்மன் குடிபாட்டு மக்கள் வசிக்கும் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அம்மன் கோப்பணம்பாளையம், புங்கம்பாளையம், முனியகவுண்டம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வீதி உலா சென்று இறுதியாக உரம்பூர் வந்தடைந்தது. பின்னர் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. சேகர், செல்லாண்டியம்மன் கோவிலின் முக்கிய பிரமுகர்கள்,விழாக் குழுவினர் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.