அங்கன்வாடி மையம் இல்லாமல் குழந்தைகள் அவதி
அங்கன்வாடி மைய கட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 10:01 GMT
சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகளக்காடி கிராமத்தில், விநாயகர் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அது, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நாளடைவில் பழுதடைந்து, கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்தது. குழந்தைகளின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழைய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, தனியார் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, எட்டு பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். தனியார் கட்டடத்தில் போதிய இடம், கழிப்பறை, சமையல் கூட வசதிகள் இல்லை. மேலும், ஓடு வேய்ந்த கட்டடம் என்பதால், மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் புதிய அங்கன்வாடி மைய கட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.