நாசரேத் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா ஆராதனை
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நாசரேத் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் விடிய, விடிய ஆராதனை நடந்தது.
கிறிஸ்து பிறப்பு தினத்தை கிறிஸ்துமஸ் விழாவாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் நெல்லை,குமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக நாசரேத் பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதினாலும் கிராம மக்கள் தெரு வீதிகளில் வசித்து வருவதாலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. ஆனாலும் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தது. குறிப்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடு இரவு 12 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
அதிகாலை 3:30 மணிக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனையும் மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் அருட்செய்தி வழங்கினார். காலை 9 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. பேராலய உதவி குரு பொன் செல்வின் அசோக்குமார் அருட்செய்தி வழங்கினார். மாலை 7 மணிக்கு மாலை ஆராதனை நடைபெற்றது. ஆராதனை நிறைவு பெற்றதும் வாணவேடிக்கை நடைபெற்றது. வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை ஆராதனையும் சேகரகுரு ஞானசிங் எட்வின் தலைமையில் சபை ஊழியர் ஜான் வில்சன் முன்னிலையில் நடைபெற்றது.
நாசரேத் சுற்றுப்புற பகுதிகளான வகுத்தான்குப்பம் மூக்குப்பீறி, பிரகாசபுரம், ஓய்யான்குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, வாழையடி, பிள்ளையன்மனை, ஆசிர்வாதபுரம், வெள்ளமடம், தைலாபுரம் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. நாசரேத் சந்தி பஜாரில் இளைஞர்கள் சார்பிலும், நாசரேத் மோட்டார் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகிலும் அலங்கார மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.