தடுப்பு சுவர் கட்டுவதில் இருதரப்பினரிடையே மோதல்
வராக நதி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டுவதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஒருவருக்கு பலத்த காயம்
Update: 2024-01-25 09:45 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சியில் உள்ள பட்டாளம்மன் முத்தையா கோவில் உள்ளது. மேலும் இக்கோவிலானது வராகநதி ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் சேதமடையும் சூழ்நிலை உள்ளது. இதனால் கோவிலை ஒட்டியுள்ள ஆற்றங்கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க தேனி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் கோவிலின் பாதுகாப்பிற்காக தடுப்புச் சுவர் முழுமையாக அமைக்கப்பட வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் அந்தப் பகுதியில் திருவிழா காலங்களில் வராகநதி ஆற்றில் இறங்கி கரகம் எடுத்து பூஜை செய்வதற்காக படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், காவல்துறையினர் காயம் அடைந்த வரை பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளார். இதனிடையே அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து இருதரப்பினர் இடையே சமூக பேச்சுவார்த்தை நடத்தி கட்டுமான பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க கூறி அங்கிருந்து சென்றார். மேலும் மோதல் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.