மூடப்பட்ட அம்மா குடிநீர் மையம் - மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு

சென்னையில் மூடப்பட்டுள்ள அம்மா குடிநீர் மையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-07 08:21 GMT

மூடப்பட்டுள்ள குடிநீர் மையம்

சென்னையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், ஒவ்வொரு மாநகராட்சி வார்டுகளிலும், அம்மா குடிநீர் மையம் துவக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. குடிநீர் மையத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 3,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, ஆட்சி மாற்றத்திற்குப் பின், பல்வேறு இடங்களில் உள்ள அம்மா குடிநீர் மையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இயந்திரம் பழுது மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், அதை சீரமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு, கோயம்பேடு, அவ்வை திருநகர், வளசரவாக்கம் மண்டலம் 151வது வார்டு சின்னபோரூர் பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா குடிநீர் மையங்கள், பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. எனவே, இதே போல் சென்னையில் பூட்டிக் கிடக்கும் அம்மா குடிநீர் மையங்களை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News