ஏரிகளில் கழிவுநீர் விடும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் கழிவுநீர் விடும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை.

Update: 2024-02-23 15:22 GMT

வெளியேற்றப்படும் கழிவுநீர் 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் மாசடைந்து வருகின்றன. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் சரி செய்யாவிடில், தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாவில், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன. இங்கு கார், பேருந்து, லாரி, ஜே.சி.பி., பைக், டயர், கண்ணாடி, போன்றவை தயாரிக்கும் 1,000த்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், மாத்துார், ஒரகடம், வெங்காடு, ஸ்ரீபெரும்புதுார், போந்துார், மாம்பாக்கம், வைப்பூர், பிள்ளைப்பாக்கம், வடக்குப்பட்டு, வல்லம், பண்ருட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகள் அதிகப்படியாக மாசடைந்து வருகின்றன. குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் ஊராட்சியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வைப்பூர் சித்தேரி மற்றும் பெரிய ஏரி உள்ளது. ஒரகடம் சிப்காட்டின் ஒருபகுதி, வைப்பூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. இங்கு, தொழிற்சாலைகள் வருகைக்கு பின், விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்தாவிட்டாலும், இந்த ஏரியின் நீர் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. தவிர, மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க, ஏரிநீரை குடித்து வருகின்றன.
Tags:    

Similar News