விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடிய கூட்டுறவுத்துறையினர்
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுடன் இணைந்து கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்திலும் சமத்துவ பொங்கல் விழாவை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கொண்டாட அறிவுறுத்தப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் காவந்தண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் விவசாய பகுதியில் விவசாயிகள் கிராம பொதுமக்கள் என அனைவரிடம் இணைந்து பொங்கல் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ கலந்துகொண்டு பொதுமக்களின் இணைந்து புது பானையில் பச்சரிசி பால் வெல்லம் உள்ளிட்டவை கொண்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் விவசாய பெருமக்களுக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விளக்க உரை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மூலம் பத்து நபர்களுக்கு பயிர் கடன் ஐந்து நபர்களுக்கு கறவை மாடு என மொத்தம் 20 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.
இதில் விவசாய உபகரணங்களான அறுவடை இயந்திரம் , டிராக்டர், மருந்து தெளிப்பான் உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை பெண் ஊழியர்கள் கைத்தறி சேலைகளையும், ஆண்கள் பாரம்பரிய வேட்டியுடன் கலந்து கொண்டு கைத்தறி துணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விவசாயிகள் கூட்டுறவுத் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.