தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா கடனுதவி : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.;

Update: 2024-01-22 05:50 GMT
தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா கடனுதவி : ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி 

  • whatsapp icon

 ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறு சீரமைப்புக்கான கடன் நிதி உதவி தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழக அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் கடன் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உற்பத்தி மற்றும் சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், இந்த திட்டத்தில் கடன் வாங்க (வர்த்தகம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் தவிர்த்து) தகுதியுடையவை. இந்த கடன் உதவியை பெற எந்தவிதமான பிணையச் சொத்தும் தேவையில்லை. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச நிதியுதவியாக ரூ.1 லட்சமும் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், 6 சதவீத வட்டியில் வழங்கப்படும். கடந்த 3.9.2023 அன்று நிறுவனமானது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் கடன் பெற்ற நிறுவனம் முதல் 3 மாதங்களுக்கு வட்டியும் பின்னர் 4-வது மாதம் முதல் அடுத்த 18 மாதங்களுக்கு அசல் தவணையுடன் வட்டியும் செலுத்த வேண்டும். இந்த திட்டமானது வருகிற 31-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே கடனுதவி தேவைப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், ‘கிளைமேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், 4/35, என்.பி.எஸ் வணிக வளாகம், 2-வது மாடி, போல்பேட்டை, தூத்துக்குடி’ மற்றும் ‘பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி’ ஆகிய அலுவலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு www.tiic.org என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News