சுவையாக இல்லாத சத்துணவு ருசி பார்த்து கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி அரசு திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு

Update: 2024-02-23 05:31 GMT

 கலெக்டர் அறிவுரை

'உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்' காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, அரசு திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மானாம்பதி ஊராட்சியில் நடந்த உங்கள் ஊரில் உங்கள் திட்ட முகாமில் பொதுமக்களிடம் கலெக்டர் கலைச்செல்வி மனுக்கள் பெற்றார். மானாம்பதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், மருத்துவ வசதிகள், மருந்து இருப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அதை தொடர்ந்து, மானாம்பதி அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குகின்ற மதிய நேர உணவை பரிசோதித்த கலெக்டர் கலைச்செல்வி, சத்துணவு சுவையானதாக இல்லை எனவும், சத்தாண உணவு வழங்கவும் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், அப்பள்ளி மாணவர்களின் கற்றன் திறன் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அம்மையப்பநல்லூர் ஊராட்சியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளரின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். தொடர்ந்து உத்திரமேருர் பேரூராட்சியில், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை பணிகளை ஆய்வு செய்து அதன் தரம் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று, பினாயூர், குருமஞ்சேரி, அரும்புலியூர் ஆகிய ஊராட்சிகளில் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. அங்கன்வாடி, இ - சேவை மையம் போன்றவற்றை ஆய்வு செய்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News