வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், இத்துறைகளில் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்தும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்.
மேலும், தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சரியான முறையில் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொ) குமாராஜா, (வளர்ச்சி) ஜெயசீலன், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் புஷ்பாதேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ந£கராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (அமராவதி வடிநிலக்கோட்டம்) கோபி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.