பாசன நீர் மேலாண்மை குறித்து ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா தாளடி நெற்பயிர்களில் பாசன நீர் மேலாண்மை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-28 01:17 GMT

 தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா தாளடிபருவத்தில் இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 999 ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பரப்பில் 41,997 ஏக்கர் ஆற்று நீர் மூலம் பாசனம் செய்யப்பட்டு வந்தது. ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பரப்பில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் சுமார் 5400 ஏக்கரில் தற்போது பாசனநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்த வட்டாரங்களில் ஆய்வு மேற்கொண்டு வறட்சி தாங்கும் வழிமுறைகள் குறித்தும், பாசன நீர் மேலாண்மை மற்றும் அறுவடை வரை பயிர்களை காப்பாற்றி கொண்டு வருவது குறித்த வழிமுறைகளை கண்டறிந்திட வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலர் ஆணைப்படி வேளாண்மை துறை, நீர்வளத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி ஆகியோர் கொண்ட கூட்டு ஆய்வு குழு தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வட்டாரத்தில் பெரம்பூர் ஒன்றாம்சேத்தி, பெரம்பூர் இரண்டாம் சேத்தி, கூடலூர், நல்லிச்சேரி, ராமநாதபுரம் கூடுதல், சீராளூர்,தண்டாங்கோரை, திட்டை, வேலூர், சித்திரக்குடி கூடுதல் ஆகிய கிராமங்களில் ஆற்று நீர் மூலம் பாசனம் பெற்று வந்த நெற்பயிர்களில் சுமார் 1200 ஏக்கர் தற்போது பால் பிடிக்கும் மற்றும் முதிர்ச்சி அடையும் பருவத்தில் உள்ளது. இக்கிராமங்களில் இக்குழுவினர் பாசன நீர் மேலாண்மை முறைகள் குறித்தும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்பொழுது பால் பிடிக்கும் தருணம் மற்றும் முதிர்ச்சி அடையும் தருணத்தில் உள்ள நெற்பயிரில் உரிய பாசன மேலாண்மை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சராசரியான மகசூல் எடுக்க இயலும். இதன் அடிப்படையில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு சதவீத பி பி எஃப் எம் நுண்ணுயிர் கலவை அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மாலை வேளையில் பயிர்கள் நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் 15 நாட்களுக்கு பயிரின் வளர்ச்சி பேணப்பட்டு, அறுவடை நிலைக்கு கொண்டு சென்று சராசரியான மகசூலை விவசாய அடைய முடியும் என வேளாண்மை பல்கலை கழக விஞ்ஞானி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தஞ்சாவூர் வட்டாரத்தில் கூட்டு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட கிராமங்களை பார்வையிட்டார். ஆற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்து தற்பொழுது பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள நெற்பயிர்களுக்கு ஆங்காங்கு இருக்கும் நீர் நிலைகளிலிருந்து ஆயில் இன்ஜின் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படுவதை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். அதன்படி தேவைப்படும் இடங்களில் நுண்ணுயிர் கலவை அல்லது பொட்டாசியம் குளோரைடு கரைசல் இவற்றை பயன்படுத்திடவும் கேட்டுக்கொண்டார். மேலும், இதுபோல் ஆற்றுநீர் மூலம் பாசனம் பெற்று தற்போது பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள வயல்களை அனைத்து துறைகளின் கூட்டுக் குழுவினர் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் இரண்டு தினங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்கிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News