மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கிய ஆட்சியர்

சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் வழங்கினார்.

Update: 2024-07-04 02:26 GMT

மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய ஆட்சியர் 

 தமிழ்நாடு அரசு நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களிடையே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான " மீண்டும் மஞ்சப்பை " இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நேற்று  எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மஞ்சப்பைகளை வழங்கினார்.

பின்னர் மாணவ மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: நெகிழியை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றது. நம்மையும், நம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் இது குறி எடுத்துரைக்க வேண்டும். கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போதோ, பிற பயன்பாடுகளுக்காகவோ பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என எடுத்துச்சொல்ல வேண்டும். நீங்களும் அதை கடைபிடிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடில்லா தமிழ்நாட்டை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பது குறித்தும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று பொருட்களின் பயன்பாடு குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு துறையினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News