கல்லூரி கனவு நிகழ்ச்சி முன்னேற்பாடு பணி - ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் வரும் 11ம் தேதி நடத்தப்படவுள்ள ‘கல்லூரி கனவு” - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.05.2024), 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் வருகின்ற 11.05.2024 அன்று நடத்தப்படவுள்ள மாபெரும் ‘ கல்லூரி கனவு” - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கலை மற்றும் அறிவியல் துறைசார்ந்த கல்வியாளர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பேசும்போது தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பதே ‘கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவுத்தேர்வு, கல்விக்கடன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தகவல்களும் அளிக்கப்படவேண்டும். பள்ளிக்கல்விக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் அர்த்தமுள்ள உயர்கல்வி படிப்புகளைத் தொடரச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிந்து அடுத்து எந்த துறையில் என்ன படிக்கலாம்? என்ற கேள்விகளுடன் உள்ள மாணவர்கள் தொடரக்கூடிய உயர்படிப்புகள் மற்றும் அடுத்தடுத்த வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளும், சந்தேகங்களுக்கு உரிய தீர்வும் அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ கல்லூரி கனவு” - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வருகின்ற மே 11ஆம் தேதி அன்று தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகள் பற்றியும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் உதவி எவ்வாறு பெறுவது என்பது பற்றியும், வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் முதல்வர் தேரடிமணி, தமிழ்நாடு மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நீதிசெல்வன், பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியின் முதல்வர் பீட்டர் தேவதாஸ், உதவி இயக்குநர் (திறன் பயிற்சி) ஏஞ்சல் விஜய நிர்மலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பத்மநாபன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.