மாயனூர் அருகே கஞ்சா பதுக்கிய கல்லூரி மாணவன் கைது
மாயனூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கிய கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக போதைப் பொருட்கள் தடை அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் ரஷ்யா சுரேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 20 ஆம் தேதி காலை 11 மணி அளவில்,
மாயனூர் அருகே உள்ள மணவாசி டோல்கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார் காவல் ஆய்வாளர் ரஷ்யா சுரேஷ். அப்போது, கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வரும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மணவாசி, இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் வயது 22 என்பவரை விசாரித்தபோது,
விற்பனை செய்யும் நோக்கோடு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பதுக்கி வைத்திருந்த ஒரு 1,100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக கார்த்திகேயனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் போதை பொருள் தடுப்பு காவல்துறையினர்.