கழிவுநீர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன், தந்தை உடல் நசுங்கி பரிதாப பலி: சர்ச் சென்றபோது சோகம்

கழிவுநீர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன், தந்தை உடல் நசுங்கி பரிதாப பலி. விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-13 05:39 GMT

கல்லூரி மாணவன், தந்தை உடல் நசுங்கி பரிதாப பலி

சென்னை அண்ணாநகர் அடுத்த, செனாய் நகர் வெங்கடாசலம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட்(52), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகன் சாமுவேல்(20), தனியார் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அடையாளம்பட்டு பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு தந்தை, மகன் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் அடையாளம்பட்டு அருகே இருவரும் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கழிவுநீர் லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் ராபர்ட் மற்றும் மகன் சாமுவேல் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான கழிவுநீர் லாரி டிரைவர் மாரியப்பன்(30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இருவரும் தேவாலயத்திற்குச் சென்றபோது விபத்தில் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, அந்த கழிவுநீர் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விதிமுறைகளை மீறி விடுவதாகவும், சர்வீஸ் சாலையில் அதிவேகத்தில் கழிவுநீர் லாரிகளை இயக்குவதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News