திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இரண்டு ஷிப்டுகளாக கல்லுாரி செயல்பட்டு வந்தது.இந்நிலையில் கல்லுாரியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதால், கடந்த 18 ம் தேதி முதல் கல்லுாரியில் ஷிப்டு முறை ரத்து செய்யப்பட்டு,
ஒரே வேலையாக காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 ம் தேதிமீண்டும் ஷிப்டு முறையை கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள், கல்லுாரி வரண்டாவில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லுாரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். கல்லுாரி முதல்வர் நாராயணன்(பொறுப்பு), போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்கள் தரப்பில் விழுப்புரம் உள்ளிட்ட கல்லுாரிகளில் ஷிப்டு முறை அமலில் உள்ளது. கல்லுாரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இறுதியில் ஷிப்டு முறையை அமல்படுத்துவதற்கு கல்லுாரி நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நேற்று பிற்பகல் 11.30 மணிக்கு விலக்கி கொள்ளப்பட்டது.இதற்கிடையில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.