பூங்காக்கள் சீரமைக்கும் பணி துவக்கம்
திருவேற்காட்டிலுள்ள பூங்காக்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீடில் 23 பூங்காக்கள் உள்ளன. கடந்த 2021க்கு பின், பூங்காக்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் காட்சியளித்தன. குறிப்பாக, திருவேற்காடு, சுந்தரசோழபுரம், பால கிருஷ்ணா நகரில் உள்ள பூங்கா, கோலடி சாலையில் உள்ள பாரதி நகர் பூங்கா மற்றும் சூர்ய நாராயணன் நகரில் உள்ள சூர்ய நாராயணன் பூங்காக்கள் குறித்து, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் எதிரொலியாக, காலை ஆவடி எம்.எல்.ஏ., நாசர் தலைமையில், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன், தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், சுந்தர சோழபுரத்தில் உள்ள பால கிருஷ்ணா நகர் பூங்காவை பார்வையிட்டனர். தொடர்ந்து, பூங்காவில் பக்கவாட்டு சுற்றுச்சுவர் உடைத்து, இரண்டு 'பொக்லைன்' வாகனம் உதவியுடன் பூங்காவில் வளர்ந்திருந்த புதர்களை அழித்தனர்.