மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு இழப்பீடு வழங்க கோரிக்கை!

தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

Update: 2024-05-24 08:28 GMT

மழைநீரில் மூழ்கியதால் முளைத்த நெல் மணிகள். விராலிமலை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஐந்து நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.விராலிமலையை அடுத்த ராஜாளிபட்டி ஊராட்சிக்குள்பட்ட கோனார்பட்டி, பாட்னா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் நவரை பருவத்தில் பயிரிடப்பட்டு மே மாதம் கடைசி மற்றும் ஜூன் முதல் வாரத்தில் அறுவடைக்கு செய்யப்படவிருந்த நெற்பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கின.

தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், விவசாய நிலங்களில் தேங்கிய நீர் வடிய முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால், நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெற்பயிர்கள் அனைத்தும் மூழ்கி முளைத்து விட்டதால் அப் பயிர்களை அரிசியாக்கி உணவுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகள் மூழ்கிய பயிர்களை முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News