மாடு பிடித்த ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது புகார்
வளசரவாக்கம் அருகே மாடு பிடித்த ஊழியரை தாக்கிய மாட்டின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளசரவாக்கம் மண்டலம், 148வது வார்டில் பணிபுரியும் மாநகராட்சி ஊழியர் கன்னியப்பன், 46, சக ஊழியர்களுடன் சேர்ந்து நேற்று, நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மாடு உரிமையாளரான ராகேஷ் என்பவர், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரமடைந்த அவர், கன்னியப்பனின் மொபைல்போனை பிடுங்கி, அவர் மீதே வீசினார். அத்துடன் அவரை ஆபாசமாக பேசி, காலால் உதைத்து சரமாரியாக தாக்கினார். இதை, அங்கிருந்த சக ஊழியர் வீடியோவாக பதிவு செய்தார். பின், ராகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன், இவரது மாட்டிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆத்திரத்தில் தாக்கியது விசாரணையில் தெரிந்தது.