முனியப்பன் சாமி சிலையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்
பழமை வாய்ந்த முனியப்பன் சாமி சிலை காணவில்லை என வெப்படை காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பழமை வாய்ந்த முனியப்பன் சிலை திருட்டு பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் புகார். வெப்படை போலீசார் விசாரணை. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த முனியப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்த பகுதியில் உள்ள எட்டு கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருவிழாக்கள் நடத்தப்படாமல், தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெற்று, நடை சாத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி காலை கோவிலை வழக்கம்போல் திறக்க வந்த பூசாரி பெருமாள், கோவிலில் கதவு திறக்கப்பட்ட நிலையில், பீடத்திலிருந்து சிலை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் இன்று, ஒன்று திரண்டு வெப்படை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாலமுருகனரிடம் புகார் அளித்தனர்.
அப்பொழுது அவர் புகாரை பெற்றுக் கொண்டு, இது குறித்த புகாரை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் கீதா என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா விடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த முனியப்பன் கோவில், இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி வருகிறது. எனவே விரைவில் இந்து சமய அறநிலைத்துறையும், காவல்துறையும் இணைந்து சிலையை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும், மேலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.