முறைகேடு புகார் - அரசு மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எதிரொலியாக மஞ்சூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் உள்ளன. இங்கு கீழ்குந்தா, தாய்சோலை, கரியமலை, பிக்கட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு வெளி நோயாளிகளாக தினசரி 200 பேரும், உள் நோயாளியாக 20 பேரும் உள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர் ரஞ்சனி மீது முறைகேடு உள்பட பல்லவேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பரமேஸ்வரி, மஞ்சூர் அரசு மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தார்.டாக்டர் ரஞ்சனி தங்கியுள்ள அரசு மருத்துவ குடியிருப்பிலும் ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடன் ஊட்டி ஆர்.டி.ஓ., மகராஜ் உள்பட வருவாய்த் துறையினர் பலர் இருந்தனர்.
அப்போது சுகாதார பணிகள் இணை இயக்குனரிடம் அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- மஞ்சூர் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பல்வேறு அவசர தேவைகளுக்காக இங்கு வந்தால், பெரும்பாலும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து விடுகிறார். இங்கு எந்த சிகிச்சையும் அளிப்பது கிடையாது. சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் பரிசோதனை செய்வதற்கு நோயாளியை கையால் தொட மாட்டார், நோயாளியை பேனா மூலம் தொட்டுப் பார்ப்பார். மருந்து, மாத்திரைகளை தனியாரிடம் வாங்க சொல்கிறார்.இரவு 8 மணிக்கு மேல் வரக்கூடாது என்கிறார். சமீபத்தில் உயர் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துச் சென்றுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையை மஞ்சூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரஞ்சனியை, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமேஸ்வரி கூறுகையில், "கடந்த 8 வருடங்களாக அரசு கொடுத்த கணினி, பிரிண்டர், நாற்காலி, உள்ளிட்ட பொருட்களை சொந்த பயன்பாட்டுக்காக, டாக்டர்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பில் வைத்து பயன்படுத்தியுள்ளார். மருத்துவமனை பராமரிப்பு, பழுது பார்ப்பு பணிகளுக்கு அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை சொந்த கணக்கில் பயன்படுத்தியுள்ளார். எனது அனுமதி இல்லாமல் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மருந்து மாத்திரைகளை எடக்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். எனவே விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் புகாரின் அடிப்படையில் அவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்," என்றார்.