இரட்டைப் பெண் குழந்தைகளை விற்றதாக புகார்: போலீசார் விசாரணை
இரட்டைப் பெண் குழந்தைகளை ரூபாய் ஐந்து லட்சத்திற்கு விற்றதாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த தொழிலாளிக்கு திருமணமாகி 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது 45 வயது மனைவி 4-வதாக மீண்டும் கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் தம்பதி இருவரும் சேலத்திற்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் நிறை மாத கர்ப்பிணியாக சென்ற குழந்தைகள் எதுவும் இல்லாமல் தனது கணவருடன் வந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் புதிதாக பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பெங்களூருவில் விற்பனை செய்து விட்டதாக சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு புகார்கள் வந்ததன் பேரில் இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் போலியான முகவரியை கொடுத்து பிரசவத்திற்காக சேர்ந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு அவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததும், ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் அந்த பெண் குழந்தைகளை வளர்க்க விருப்பம் இல்லாதால் அதனை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண் யாரிடம் தனது குழந்தைகளை விற்பனை செய்தார் என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி உமா மகேஷ்வரி பெங்களூர் சென்று விசாரணை நடத்த உள்ளார்.