தமிழக மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மீனவர்கள் கிழித்து நாசப்படுத்தியதாக புகார்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தோப்புத்துறை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை, அதிவேக விசைப்படகுகளில் வந்த புதுச்சேரி மீனவர்கள் கிழித்து நாசப்படுத்தியதாக புகார்; 30,லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறிகொடுத்துவிட்டு வேதனையுடன் கரை திரும்பிய நாகை மீனவர்கள்.

Update: 2024-02-23 02:39 GMT

மீனவர்களின் வலைகள் நாசம் 

நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள், நேற்றிரவு 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் தோப்புத்துறை அருகே 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அதிவேக என்ஜின் கொண்ட விசைப்படகுகள், செருதூர் மீனவர்களின் வலைகளை கிழித்து நாசப்படுத்தியுள்ளனர். அடுத்தடுத்து தொடர்ச்சியாக செருதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்,முருகபாண்டி, ஐயப்பன், சித்திரவேல், ராஜசேகர்,ரமேஷ், தர்மன் ஆகியோரின் இருபதுக்கு மேற்பட்ட வலைகள் கிழிக்கப்பட்டதால், கடலில் மீன் பிடிக்க முடியாமல் செருதூர் மீனவர்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறிகொடுத்து விட்டு இன்று வெறுங்கையுடன் வேதனையுடன் கரை திரும்பினர். தோப்புத்துறை கரையோரம் சிறு தொழில் ஈடுபட்ட செருதூர் மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த அதிவேக என்ஜின் கொண்ட விசைப்படகுகள் கிழித்து நாசப்படுத்தி, அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் என்பது அங்குள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அத்துமீறலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News