தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சலுகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நாகை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாகை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 11 தொடக்கப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 13 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசுப் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமையும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.
மேலும் அரசுப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், நான்கு இணை சீருடைகள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நிலவரைபடம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை, ஆதிதிராவிட நல ஊக்கத் தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை, தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை, திறனறித் தேர்வு ஊக்கத் தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத் தொகை, சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல் மேலும் பள்ளி விடுதிகளில் வழங்கப்படும்.
சலுகைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் 5 வயதிற்கு மேற்பட்ட மாணாக்கர்களை பெற்றோர்கள் அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்த்து அரசு நலத்திட்ட உதவியுடன் இலவசமாக கல்விப்பயின்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நாகை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியுள்ளார்