கொமதேக வேட்பாளரை ஆதரித்து செல்வப் பெருந்தகை பிரசாரம்
ராசிபுரம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் V.S. மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூட்டணி கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப் பெருந்தகை, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள அத்தனூர்-ஆலம்பட்டி மற்றும் அத்தனூர் பாவடி ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய செல்வப் பெருந்தகை, தமிழ்நாட்டை ஓர வஞ்சனையோடு மத்திய அரசு நடத்தியது. இதற்கு அதிமுக துணை போனது. காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் இந்தியா கூட்டணி இந்த தேர்தலை சந்திக்கிறது. மத்திய பாஜக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் கேட்கின்றனர். ஆனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று 80 சதவீதம் வாக்குகளை நிறைவேற்றியுள்ளார்.
80 சதவீத மகளிர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். பெண்கள் கல்வி முன்னேற்றம் சமூக விடுதலை அடைய புதுமைப்பெண் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் அவர்கள் பட்டம் பெற்று பணிக்கு செல்ல முடிகிறது. அதேபோல நான் முதல்வன் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்துகிறது. இன்னுயிர் காப்போம் 48 திட்டம் மூலம், சாலை விபத்துகளில் கணிசமாக இறப்பு குறைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி இளைஞர்களுக்கான நீதி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வழங்க உள்ளார்.
அதுபோல பெண்களுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, மகாலட்சுமி திட்டத்தில் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க ராகுல் காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்புக்கு உறுதி அளித்துள்ளோம். ஆனால் நரேந்திர மோடி 15 லட்ச ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக கூறி இதுவரை வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிலிண்டர் விலை 420 ஆக இருந்தது. இப்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளனர். தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்துள்ளனர். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி வழங்கவில்லை.
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து விட்டது. மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதுகுறித்து பிரதமர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. நாட்டில் அமைதி இன்மையை மோடி அரசு தினித்துள்ளது. எல்லா மக்களும் செழிப்போடு வாழ வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்த தேசத்தை பாதுகாப்பதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கு செல்வப் பெருந்தகை அத்தனூரில் பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது, திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைத் தலைவரும் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் V.S. மாதேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில நிர்வாகி சேகர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ரவீந்திரன், விசிக மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுன், மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.