தீவிர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், விபத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு, தனியாக புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2024-06-09 11:18 GMT

தீவிர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படுவோர் கொண்டுவரப்படுகின்றனர். அதோடு, அருகில் உள்ள மாவட்டங்களில், விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவோரும், இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அதனால், விபத்து பாதிப்புகளுக்கு என, தீவிர சிகிச்சை பிரிவு தனியாக ஏற்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ மையம் சார்பில், 2023- - 23ம் நிதியாண்டில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, விபத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கென தனியாக கட்டடம் கட்ட, 20 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

அதன்பின், மருத்துவமனை வளாகத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் விபத்து தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுவதற்கு, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், மூன்று தளங்களில், 50 படுக்கை வசதிகளுடனும், தரைத்தளத்தில் விபத்து உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள், இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம், மூன்றாம் தளத்தில் செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் தங்கும் அறை கள் அமைகின்றன. இப்பணிக்கு, கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, மார்ச் மாதம் துவங்கி, கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News