புறநோயாளிகள் பிரிவு கட்டட பணிகள் நிறைவு
செய்யூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டட பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அடுத்த மாதம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை உள்ளது. நல்லுார், புத்துார், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, அம்மனுார், கீழச்சேரி என, 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். புறநோயாளிகள் மற்றும்அவசர சிகிச்சை என, தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது.
மேலும், மழைக்காலங்களில் கட்டடத்தில் மழைநீர் ஒழுகி, நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அவதிப்பட்டு வந்தனர். புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பாக, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1,500 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த செப்., 22ம் தேதி பூமி பூஜை நடந்தது. பின், கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், பணிகள் முழுதும் முடிந்து, தற்போது புறநோயாளிகள் பிரிவு கட்டடம் தயார் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் திறப்பு விழா நடத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.