வேளாண் பொருள்களை சந்தைபடுத்த கலந்தாய்வு கூட்டம்!
இடைதரகர்கள் இன்றி விளை பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவது குறித்து விவசாயிகளுடனான கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், ஊட்டி வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான தேயிலை, மலைப்பயிர்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது.
வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதன்மை மேலாளர் தீபன் சக்கரவர்த்தி வரவேற்றார். வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் அழகுசுந்தரம் கூறியதாவது :- மதுரை மாவட்டமான நீலகிரியில் மண்வளம் சிறப்பாக உள்ளது. இதனால் இங்கு 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு 70 சதவீதம் நிலத்தில் தேயிலையும், மீதம் உள்ள இடத்தில் மழை காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. விவசாய பொருட்களை சந்தைபடுத்துவது குறித்து இங்கு பலருக்கும் தெரிவதில்லை.
விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி விளை பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. இதுதவிர தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் படி, நீலகிரி மாவட்டத்தில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் சாகுபடி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய, ஏற்றுமதி வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து இந்திய அரசின் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய வணிக மேம்பாட்டு மேலாளர் கீர்த்தனா பங்கேற்று, இந்தியாவில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு சாகுபடி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, அதற்கு எவ்வாறு உரிமம் பெறுவது என்பது குறித்து விளக்கமளித்தார். தேயிலை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து குன்னூர் தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் உமா மகேஷ்வரியும், ஏற்றுமதி சார்ந்த பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து வெளிநாட்டு தொழில் மேம்பாட்டு அலுவலர் சிவஞானமும் விளக்கினர். இதில் வேளாண்மை அலுவலர் கலைவாணி நன்றி கூறினார்.