நாகர்கோவிலில் அடுத்தடுத்து கொள்ளை - உள்ளூர் கும்பலா?
நாகர்கோவிலில் அடுத்தடுத்து நடைபெற்ற நான்கு கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் அருகே வாசித்து வரும் கணேசன் மற்றும் அவரது வீட்டு அருகே உள்ள சிந்து ஆகியோரின் வீடுகளை உடைத்து கடந்த தினம் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் கணேசன் வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. சிந்து வீட்டில் இருந்து ஐந்து பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது. இது குறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருப்பதிசாரம் என்ற பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டில் இருந்து இரண்டரை பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆறுமுகம் அம்மாள் என்பவர் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய், 7 பவுன் நகைகள் கொள்ளை போனது. தொடர்ந்து நான்கு கொள்ளை சம்பவங்கள் நடந்தது அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து நாகர்கோவில் டிஎஸ்பி யாங்சன் டோமா பூட்டியா தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் யாரும் இல்லாத சமயம் பார்த்து கொள்ளைகள் நடந்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் அவர்கள் நடவடிக்கை ஆகியவற்றை பார்க்கும் போது அவர்கள் உள்ளுர் குற்றவாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசருக்கு எழுந்துள்ளது.