காற்றாலையில் செம்பு கம்பி திருட்டு - இருவா் கைது
தென்காசி அருகேயுள்ள இடைகால் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா்களை திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
இடைகால் காவல் சரகம் சின்னப்பையன்குளத்துக்கரையில் அமைந்துள்ள காற்றாலையிலிருந்து கடந்த நவ.23இல் 25 மீட்டா் நீளமுள்ள காப்பா் பவா் கேபிள் திருடுபோனது. இதுகுறித்து காற்றாலை நிா்வாக மேலாளா் சின்னத்துரை(45) அளித்த புகாரின்பேரில், இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். மேலும், காவல் ஆய்வாளா் வேல்கனி தலைமையில் உதவிஆய்வாளா் வரதராஜன், போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதில், அந்தக் காற்றாலையில் பணிபுரிந்த கடையநல்லூா் துரைசாமிபுரம் ஊா்சாவடி தெருவை சோ்ந்த செல்வகுமாா் (23), இடைகால் சங்குபுரம் இசக்கியம்மன் கோயில் தெருவை சோ்ந்த ராஜசேகரன்(28) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை தனிப்படையினா் கைது செய்து காப்பா் வயரை பறிமுதல் செய்தனர்.