உலம்ப குடை குளத்தின் கரையில் விரிசல் - தண்ணீர் வெளியேறும் அபாயம்

கொடைக்கானல் மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலம்ப குடை குளத்தின் ஒரு கரையில் விரிசல் ஏற்பட்டு இடிந்து வருவதால்,குளத்தின் உள் கரைகள் இடிந்து தண்ணீர் வெளியேறும் அபாயம்ஏற்ப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி குளத்தின் கரையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-02 03:51 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக மன்னவனூர் கிராமம் உள்ளது, இந்த கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் மட்டும் செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் இந்த கிராமத்தில் உலம்ப குடை குளம் என்ற குளமும் அமைந்து உள்ளது, இந்த குளத்தில் மலைப்பகுதியில் பெய்து வரும் மழை நீரை தேக்கி வைத்து இந்த பகுதி விவசாய விளை நிலங்களுக்கு மலைக்கிராம விவசாயிகள் இன்றளவிலும் பயன்படுத்தி வருகின்றனர், மேலும் இப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விவசாய நிலப்பரப்பிற்கு இந்த தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது.

 இந்த குளத்தை கடந்த சில வருடங்களாக தூர் வாராமல் இருந்ததாக கூறப்படுகிறது, இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்,இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மலைக்கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டு தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்,இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் குளத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு தற்போது கரையின் ஒரு பகுதி இடிய தொடங்கியுள்ளது.

இதனை சீரமைக்காமல் விட்டால் வரும் நாட்களில் உலம்ப குடை குளத்தின் உள் கரைகள் உடைந்து தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் விவசாய நிலங்களுக்குள்ளும் இந்த பகுதி சாலைகளிலும் தண்ணீர் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் விவசாயம் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது,இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உடம்ப குடை குளத்தின் கரையை சீரமைத்து தர வேண்டும் மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னவனூர் கிராமத்திற்கு இந்த குளம் முதன்மையான குளம் என்றும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News