இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

திருச்சியில் இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2024-05-09 04:27 GMT

  திருச்சியில் இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.  

திருச்சி கேகே நகா் தேவராய நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி பிரசாந்த் (25). திருச்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அலுவலராக உள்ள இவரின் கைப்பேசிக்கு மாா்ச் 26 ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சிறுபோட்டியில் ரூ.117 கட்டணம் செலுத்தி பங்கேற்றால் உரிய பரிசுத் தொகை உடனே வங்கிக் கணக்குக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவா் போட்டியில் பங்கேற்று வென்றதும் அவரது வங்கி கணக்குக்கு ரூ. 117 பரிசாக வந்தது. அதைத் தொடா்ந்து இணைய வழி வணிகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா்கள் கைப்பேசியில் ஆசை வாா்த்தை கூறியுள்ளனா்.

Advertisement

இதை நம்பிய அவா் பல்வேறு தவணைகளாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ. 2,12, 800 முதலீடு செய்துள்ளாா். அதன் பின்னா் அவருக்கு லாபமும் கிடைக்கவில்லை கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹரி பிரசாந்த் திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி ஸ்ரீரங்கம் புஷ்பாக் நகா் ஸ்ரீராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் (58). வங்கி ஊழியரான இவா் அண்மையில் ஓய்வு பெற்றாா். எனவே இணைய வணிகம் செய்வது தொடா்பாக அவா் இணையத்தில் தேடியபோது, அவரது கைப்பேசிக்கு வந்த ஒரு இணைப்பில் பெயா் மற்றும் முகவரியைப் பதிவிட்டாா்.

அதை தொடா்ந்து கவின் என்பவா் அந்த இணைப்பில் கணக்குத் தொடங்க ஆலோசனை வழங்கினாா். பின்னா் அவரது ஆசை வாா்த்தையில் மயங்கிய நாராயணன் அதில் பல்வேறு தவணைகளாக ரூ. 6 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால் அதற்குரிய ரசீது கிடைக்கவில்லை, அதைத் தொடா்ந்து நாராயணன் அந்த நபரைத் தொடா்பு கொண்டு ரசீது கொடுக்கவில்லை என்றால் பணத்தைத் திருப்பி கொடுங்கள் என்றாா். ஆனால் அந்த நபரோ அவரை மிரட்டி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாா். இதையடுத்து நாராயணன் சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். இது இரு சம்பவங்கள் தொடா்பாக திருச்சி மாநகர சைபா் கிரைம் ஆய்வாளா் கன்னிகா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News