பம்பை ஆற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள அணைக்கட்டு
திருவாமாத்தூரில் பம்பை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு சேதமடைந்த நிலையில், புனரமைப்பு பணி விரைந்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதார மாகவும் தென்பெண்ணையாறு விளங்கி வருகிறது.மழைக்காலத்தின்போது இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதன் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த ஏதுவாக ஆற்றின் குறுக்கே தடுப்பணை, அணைக்கட்டு கள் கட்டப்பட்டன. இதில் பிடாகம் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடைந்து சேதமடைந்தது.
அதுபோல் தளவானூர், எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளும் உடைந்து சேதமடைந்தன. இதனால் மழைக்காலத்தின்போது தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் அந்த தண்ணீர் அனைத்தும் கடலில் வீணாக சென்று கலந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எல்லீஸ்சத்திரத்தில் சேதமடைந்த அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணைக்கட்டு கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதுபோல் தளவானூரிலும் புதிய அணைக்கட்டு கட்டும் பணியை விரைவாக தொடங்க வேண்டு மென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆங்கிலேயர் காலத்து அணைக்கட்டும் தற்போது பராமரிப் பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தென்பெண்ணையாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான பம்பை ஆற்றின் குறுக்கே திருவாமாத்தூரில் கடந்த 1921-ம் ஆண்டு அணைக்கட்டு கட்டப் பட்டது. இந்த அணைக்கட்டின் மூலம் முத்தாம்பாளையம், ஒரத்தூர், அகரம், கப்பியாம்புலியூர், காகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து செல்கிறது. இந்த ஏரிகள் நிரம்புவதன் மூலம் அயினம்பாளையம், திருவாமாத்தூர், சுப்பம்பேட்டை, அகரம், அய்யங்கோவில்பட்டு, செங்கமேடு உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்நிலையில் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தற் போது அணைக்கட்டு பராமரிப்பு இன்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் இந்த அணைக்கட்டின் மூலம் ஏரிகளுக்கு குறைந்த அளவே நீர் செல்கிறது. ஏரிகளுக்கு முழுமையான அளவில் நீர் செல்லாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது. மேலும் பாசன வாய்க்கால் செல்லும் பகுதிகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஏரிகளுக்கு நீர்வரத்து செல்லும் வழிப்பாதைகளில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி பாசனத்தின் மூலம் வயல்வெளிகளுக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளதால் திருவாமாத்தூர் அணைக்கட்டை புனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், திருவாமாத்தூர் அணைக்கட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ள உலக வங்கியின் நிதியாக ரூ.1 கோடியே 80 லட்சம் கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபின் அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.