சாலையில் நெற்குவியல் மீது மூடப்படும் கருப்பு நிற தார்ப்பாயால் விபத்து அபாயம்

விவசாயிகள் கருப்பு நிற தார்ப்பாய் பயன்படுத்துவதை தவிர்க்க, வேளாண் துறையினர் அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை.

Update: 2024-04-24 07:10 GMT

தார்ப்பாயால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் அடுத்த, பள்ளூர் - சோகண்டி வரை 24 கி.மீ.,க்கு ஒரு வழிச் சாலையாக மாநில நெடுஞ்சாலை உள்ளது. இது, ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலைக்கு ஏற்ப, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் சாலை ஓரத்தில், நெல்லை கொட்டி உலர்த்தி வருகின்றனர். இரவில், நெற்குவியல் மீது கருப்பு நிற தார்ப்பாய் போட்டு மூடி விட்டு, விவசாயிகள் வீட்டுக்குச் செல்கின்றனர். காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், வேலை சென்று வீடு திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை என நினைத்து, கருப்பு தார்ப்பாய் போட்ட நெற்குவியல் மீது, இருசக்கர வாகனங்களை ஏற்றி விடுகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுவதோடு, உயிர் இழப்பும் ஏற்படுகிறது. உதாரணமாக, கடந்த மாதம் நெற்குவியல் மீது, இருசக்கர வாகனத்தை ஏற்றி, இருவர் உயிர் இழக்க நேரிட்டது. இதைத் தவிர்க்க, விவசாயிகள் கருப்பு நிற தார்ப்பாய் பயன்படுத்துவதை தவிர்க்க, வேளாண் துறையினர் அறிவுரை வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

Similar News