அல்லாபாத் ஏரியில் மான்கள் உலா காஞ்சிபுரம் வனச்சரகர் ஆய்வு
அல்லாபாத் ஏரியில் மான்கள் உலாவுவதாக வந்த தகவலையடுத்து காஞ்சிபுரம் வனச்சரகர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-03-30 04:41 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேட்டில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரி, 100 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த, 2016ல் வழி தவறி வந்த, ஒரு ஜோடி புள்ளி மான்கள் இந்த ஏரியில் தஞ்சமடைந்தன. இந்நிலையில், ஏரியில் தஞ்சமடைந்த மான்கள் குட்டிகள் ஈன்று வந்ததால், தற்போது ஏரியில், 17க்கும் மேற்பட்ட மான்கள் உலாவுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். பிரதான சாலைக்கு மிக அருகில் மான்கள் உலாவுவதால், சமூக விரோதிகள் மான்களை வேட்டையாடும் சூழல் உள்ளது. எனவே, மான்களை பாதுகாக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் வனச்சரகர், செயலாக்கம் கோபா குமார் நேற்று, அல்லாபாத் ஏரிக்கரையில் மான்கள் உலாவுவதை ஆய்வு செய்தார். மான்களை பாதுகாக்கும்வகையில், சீருடை அணிந்த மற்றும் அணியாத வனக் காவலர்கள் ஏரியைச் சுற்றிலும், ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுவர். மேலும், மான்களை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கூறினார்."