சாத்தான்குளத்தில் இயந்திரம் பழுது காரணமாக வாக்குபதிவு தாமதம்
சாத்தான்குளம் பகுதியில் சில இடங்களில் மின்னனு வாக்குபதிவு பழுது காரணமாக சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் , சுண்டங்கோட்டை, குமரன்விளை மற்றும் தாமரைமொழி பகுதியில் காலை முதல் பொதுமக்கள் வாக்களிக்க காத்திருந்தனர். இதுபோல் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களும் தங்கள் ஜனநாயக கடமையாற்ற ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால் குமரன்விளை, தாமரைமொழியில் வாக்குச்சாவடிகளில் சாய்வுதள வசதி மற்றும் வீல்சேர் ஏற்பாடு செய்யப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
இதனால் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வாக்களித்தனர். சாத்தான்குளம் டிடிஏ ஸ்டீபன் துவக்கப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குச்சாவடி எண் 217ல் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மண்டல தேர்தல் பார்வையாளர்கள், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு ஒருமணிநேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. இதுபோல் அரசூர் ஊராட்சி தச்சன்விளை, புதுக்குளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னம்பாறை ஊராட்சி நகனை ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. வழக்கமாக வாக்குப்பதிவு நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை வாக்காளர்கள் தவிர மற்றவர்கள் நுழைய தடைவிதிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை 200 மீட்டர் தூரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் பள்¢ளி வாக்குசாவடியில் மெதுவாக வாக்குபதிவு நடந்தததால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்கு பதிவு நேரம் முடிந்தபிறகும் காத்திருந்தவர்களுக்கு வாக்குபதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் அருகே முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த 10க்கு மேற்பட்டோருக்கு வாக்காளர் அடையான அட்டைஇருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பள்ளி வளாகத்தில் ஜனநாயக கடமையாற்றிட தங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லையெனில் இடத்தை விட்டு நகர மாட்டோம் என நின்றனர். டிஎஸ்பி கென்னடி, தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் அனிதா, எஸ். ஐ, டேவிட் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் வாக்களிக்காமல் செல்லமாட்டோம் என தெரிவித்து வளாகத்தில் தொடர்ந்து நின்றனர். இதனையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கிமுருகேஸ்வரி சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் , சுண்டங்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சணமுகநாதன் வருகை தந்து சாத்தான்குளம் பகுதி வாக்குசாவடிகளை பார்வையிட்டார்.