கும்மிடிப்பூண்டி : தாமதமாகும் மின்சார ரயில் – பயணிகள் கடும் அவதி
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்சார ரயில்கள் தினமும் ஒரு மணி வரை தாமதமாக இயக்குவதால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூர்பேட்டை தடத்தில் தினமும் 120க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். காலை, மாலை என அலுவலக நேரங்களில் குறுகிய கதவுகளை கொண்ட ரயில்கள் இயக்குவதால், நிற்கக்கூட இடம் இல்லாமல் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
அதுமட்டுமல்லாமல், தினமும் ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். சென்னையில் மற்ற வழித்தடங்களில் 12 பெட்டிகள் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை தடத்தில் சீராக மின்சார ரயில்கள் இயக்குவதில்லை. ஒன்பது பெட்டி மின்சார ரயில்களையே அதிகளவில் இயக்குவதால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
விரைவு ரயில்கள் செல்லும் போதெல்லாம், பேசின்பிரிட்ஜ், திருவொற்றியூர், மிஞ்சூர், எண்ணுார் ஆகிய இடங்களில் மின்சார ரயில்கள் திடீரென நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், தினமும் வேலைக்கு செல்வோர், விரைவு ரயில்களை பிடிக்க சென்னை சென்ட்ரலுக்கு வருவோர் அவதிப்படுகின்றனர். எனவே, மற்ற தடங்களில் இயக்குவது போல், கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்க வேண்டும். முன்பெல்லாம் 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. கடந்த ஒரு வாரமாக ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்குவதால், பயணியர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
வெளியூர் ரயில்களை பிடிப்போரும், அலுவலக மற்றும் இதர பணிகளுக்கு செல்வோரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த தடத்தில் சீராக மின்சார ரயில்களை இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.