குறுவைத் தொகுப்பு திட்டத்தில் பணமாக வழங்காமல் உரமாக வழங்க கோரிக்கை

குறுவைத் தொகுப்பு திட்டத்தில் பணமாக வழங்காமல் உரமாக வழங்க கோரிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2024-06-29 02:33 GMT

குறுவைத் தொகுப்பு திட்டத்தில் பணமாக வழங்காமல் உரமாக வழங்க கோரிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.


குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணமாக வழங்குவதை கைவிட்டு, மானியத்தில் உரங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது: கடந்தகாலங்களில் தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமல்படுத்தியது. அப்போது உரங்களின் விலை அதிமாக இருப்பதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரங்களை மானியமாக வழங்கியது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர். ஆனால், தற்போது குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு செய்பவர்களுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது, எனவே, கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல உரங்களை இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் பல இடங்களில் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. தேர்தல் காலமாக இருந்ததால், அப்போது பணியின் தன்மை குறித்த விளம்பர பலகைகள் ஏதும் வைக்கவில்லை. எனவே தூர்வாரும் பணியை தொய்வின்றி முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.

சித்திரைப் பட்டத்தில் மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கடந்த 2012 வாங்கப்பட்ட தூசிகளை தூற்றும் இயந்திரங்கள் அனைத்தும் அவ்வப்போது பழுதாவதால், கொள்முதல் பணிகள் தேக்கமடைகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

திருவோணம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணைக் கால்வாய் புனரமைப்பு திட்டத்துக்கு தமிழக அரசு ஓதுக்கீடு செய்த ரூ.447 கோடியை முறையாக செலவிட்டு, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உடன் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை வாங்கி வேளாண் துறையிடம் வழங்கி, அத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இன்னும் 38 கிலோ மீட்டர் தூரம் தான் நிலுவையில் உள்ளது, தூர்வாரப்பட்ட பகுதிகளில் பணியின் தன்மை குறித்த விளம்பர பலகைகள் வைக்கப்படும். குறுவை நெற்பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.730 ஐ பிரிமீயமாக கட்டி காப்பீடு செய்து கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 437 ஊராட்சி குளங்கள் உள்ளது. இதில் 434 குளங்களில் மண் எடுத்து விவசாயிகள் விளைநிலங்களை வளப்படுத்திக்கொள்ள கண்டறியப்பட்டுள்ளது. எனவே மண் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மண்பானை செய்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News